Tuesday, February 5, 2013

மசினகுடி மயக்கம்..


வேலைக்கு முன் வரும் ஓய்வை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முகமது நபிகள் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான வாக்கியம்.
வருடத்தின் சில நாட்களில் தொடர்ச்சியாக கிடைக்கும் ஓய்வு இதுபோல இருக்க வேண்டும் என்று சில இடங்கள் நம்மை ஈர்த்துக் கொள்கின்றன. சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தின் மசினகுடியில் செலவிட்ட விடுமுறை நாட்கள், இயற்கையே என்னை வாரி அணைத்துக் கொண்ட உணர்வைத் தந்தன. இயற்கையும் மனிதர்களும் இணைந்தே சுமுகமாக வாழ முடியும் என்ற பாடம், இந்தக் கிராமத்தில் இருக்கிறது. நூற்றுக்கணக்கான யானைகளும் கடமான்களும் மயில்களும் எண்ணற்ற பறவைகளும் மக்களோடு எந்த மோதலும் இல்லாமல் வாழும் கிராமம் இது.
யானைகள் நீர் குடிப்பதற்கு தார்ச்சாலையைக் கடந்து செல்லும் காட்சிகள் இங்கு மிகச் சாதாரணம். முதுமலை, பந்திப்பூர், வயநாடு ஆகிய மூன்று பெரும் வனப்பிரதேசங்களுக்கு நடுவில் இருப்பதால் இயற்கையின் வனப்பு கெடாமல் இருக்கிறது. சுற்றுலா பெருக்கத்தால் மாசுபட்டுள்ள உதகமண்டலத்திற்கு அருகில் இருந்தாலும் (இங்கிருந்து, ஊட்டிக்கு 29 கிலோமீட்டர்) உள்ளூர் மக்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இந்தக் கிராமத்தை தூய்மையாக வைத்திருக்கிறது. மசினகுடியில் போய் சேர்ந்ததும் “நீங்கள் சென்னையிலிருந்து ஒரு பிளாஸ்டிக்  புட்டியில் தண்ணீர் எடுத்து வந்திருப்பீர்கள். அதை கிராமத்தில் எங்காவது எறிந்துவிட்டு புதிய புட்டி வாங்காதீர்கள். அதே புட்டியை பயன்படுத்துங்கள்.” என்று சொன்னார் சுற்றுலா வழிகாட்டியான ஆபித். அதே புட்டியில்தான் வீடு திரும்பும்வரை தண்ணீர் நிரப்பி பயன்படுத்தினோம்.
கடந்த வருடம் பருவ மழை குறைவாக இருந்தபோதும்கூட மாயாறு, மசினகுடி மக்களை வாட்டவில்லை. அவர்களுக்கும் ஊருக்கு வருகிறவர்களுக்கும் போதுமான  நீரைக் கொடுத்து வருகிறது. விலங்குகளைத் துன்புறுத்தாத அளவுக்கு குறைந்த ஒளியுள்ள விளக்குகளை இரவில் பயன்படுத்த சுற்றுலா விடுதிகள் இப்போது பழக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில விடுதிகளில் விருந்துகளின்போது, ஒலியளவு அதிகமானாலும், உள்ளூர் பழங்குடி மக்கள் அதனால் விலங்கினங்களும் பறவையினங்களும் அச்சமுறும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல இடம் இருக்கிறது. இந்த இடம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் ஆசை.
இந்தப் பயணத்தின்போது வெள்ளை வயிற்று மின் சிட்டை ஜோடியாகப் பார்க்க முடிந்தது எங்களுக்குக் கிடைத்த  பெரும் வாய்ப்பு. பாம்புப் பருந்து, வல்லூறு, புள்ளிச் சில்லை, சின்னான்கள், மைனாக்கள் போன்றவற்றை அடிக்கடி காண முடிந்தது. ஒரு முறை பட்டாணிக் குருவியையும், கரிச்சானையும் பார்த்தபோது பறவை ஆர்வலரான என் துணைவி சுபாவுக்கு இந்தப் பயணம் முழுமை அடைந்த திருப்தி கிடைத்தது. இந்தப் பறவைகளுக்கான தமிழ்ப் பெயர்களை பரவலாக்கிய பறவை ஆர்வலர்கள் ச.முகமது அலி, க.ரத்னம் ஆகிய இருவரது பங்களிப்பு இங்கு குறிப்பிடத்தகுந்தது.
முதுமலையிலும் பந்திப்பூரிலும் புலியைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தில் புலிகள் அடர்த்தியாக வாழும் வயநாட்டுக்குப் போனோம். அங்கு சற்று முன் கடந்து சென்ற புலியின் கால் தடங்களைக் கண்டோம். வயநாட்டு மலர்த் திரவியங்களின் மணத்தோடும் காட்டின் நினைவோடும் வீடு திரும்பினோம்.
- பீர் முகமது

No comments:

Post a Comment